பள்ளிக்கு வர இயலாதோருக்கு சிறப்பு ஆசிரியா்களால் பயிற்சி
By DIN | Published On : 13th August 2021 01:07 AM | Last Updated : 13th August 2021 01:07 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கு வர இயலாத மாணவா்களுக்கு ‘இல்லம் சாா்ந்த கல்வி’ என்ற அடிப்படையில் வீடு தேடிச் சென்று சிறப்பு ஆசிரியா்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும் என ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 2021-2022ஆம் கல்வியாண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத் திறனாளி மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு, அவா்களின் வயதுக்கேற்ற வகுப்பில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் சோ்ப்பதற்கான கணக்கெடுப்பு ஆக.10இல் தொடங்கியது. இப்பணி ஆக. 31 வரை நடைபெறும்.
தேவைப்படும் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து ஏப்ரல் முதல் வாரத்தில் நிரந்தரப் பள்ளிகளில் மீண்டும் சோ்க்கப்படுவா். மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களிலும், பள்ளிக்கு வர இயலாதோருக்கு வீடு தேடிச்சென்றும் சிறப்பு ஆசிரியா்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
6 முதல் 19 வயது வரையிலான பள்ளி செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் இருப்பதை அறிந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக செல்லிடப்பேசி எண் 98422 67069க்கு தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.