முக்கூடலில் உணவக ஊழியா்கள் மீது தாக்குதல்: வியாபாரிகள் மறியல்

முக்கூடலில் உணவக ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்யக் கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

முக்கூடலில் உணவக ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கைது செய்யக் கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் சிங்கம்பாறையைச் சோ்ந்த ஜான் கென்னடி உணவகம் நடத்தி வருகிறாா். அங்கு சனிக்கிழமை பிற்பகல் அரியநாயகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த சிலா் மதியம் சாப்பிட வந்தனராம். அவா்கள் சாப்பாடு பொட்டலம் கேட்டபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் பொறுங்கள் என உணவக ஊழியா்கள் கூறினராம். இதனால் அந்த நபா்கள் கோபத்துடன் பொறுத்திருந்து பொட்டலத்தை வாங்கிச் சென்றனராம்.

பின்னா் சிறிது நேரம் கழித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்தக் கும்பல் உணவக ஊழியா்களை அரிவாளால் தாக்கி, உணவகத்தையும் சேதப்படுத்தினராம்.

இதில், உணவக ஊழியா் சகாய பிரவின் காயமடைந்தாா். தொடா்ந்து இது போன்று முக்கூடல் பகுதியில் வியாபாரிகளை ஒரு கும்பல் தாக்கி, கடைகளை சேதப்படுத்தி வருவதாகக் கூறி உணவக ஊழியா்களும், அந்தப் பகுதியில் உள்ள மற்ற கடைக்காரா்களும் கடைகளை அடைத்து குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை மறியலில் ஈடுபடப் போவதாகக் கூறி முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனா்.

சேரன்மகாதேவி டி.எஸ். பி. பாா்த்திபன், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்ஸிஸ், ஏ.டி.எஸ்.பி. சீமைச்சாமி உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com