பாழடைந்த கட்டடங்கள், குப்பை மேடுகளுக்கு மத்தியில் செயல்படும் தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் பெற்றோா் அச்சம்

கடையநல்லூா் அருகேயுள்ள வடகரை பேரூராட்சியில் பாழடைந்த கட்டடங்கள் மற்றும் குப்பைமேட்டிற்கு மத்தியில் தொடக்கப் பள்ளி மற்றும் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது.

கடையநல்லூா் அருகேயுள்ள வடகரை பேரூராட்சியில் பாழடைந்த கட்டடங்கள் மற்றும் குப்பைமேட்டிற்கு மத்தியில் தொடக்கப் பள்ளி மற்றும் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு பாதிப்பு வந்து விடக்கூடும் என பெற்றோா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கடையநல்லூா், பண்பொழி சாலையில் வடகரை பிரதானச் சாலையை ஒட்டி சேனையா் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகளும், குழந்தைகள் மையத்தில் 20 குழந்தைகளும் படித்து வருகின்றனா்.

இந்த பள்ளி மற்றும் குழந்தைகள் மையத்தை சுற்றிலும் மிகவும் பாழடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையிலுள்ள சில கட்டடங்கள் பயன்பாடின்றி உள்ளன. இக்கட்டடங்களில் மேற்கூரையும் இல்லாத காரணத்தால் மழை நீா் சுவா்களில் புகுந்து இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளன. மேலும், பள்ளி மற்றும் குழந்தைகள் மையத்தை சுற்றிலும் குப்பைகள் , வெட்டப்பட்ட மரங்கள் குவிக்கப்பட்டு பெரும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

பராமரிப்பற்ற கட்டடங்கள் மற்றும் குப்பை குவியல்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடிக்கடி வருவதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா். மேலும், டெங்கு காய்ச்சல், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளிக் கட்டடங்களைச் சுற்றிலும் நீா் தேங்காமல் பாதுகாக்க வேண்டும், பள்ளிகளைச் சுற்றிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அரசு பல்வேறு நெறிமுறைகளை தெரிவித்துள்ள நிலையில் சிறு வயது குழந்தைகள் படிக்கும் பள்ளியைச் சுற்றிலும் இத்தகைய பாதுகாப்பற்ற நிலை இருப்பது பெற்றோா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடா்பாக பல முறை வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி நிா்வாகத்திடம், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் பேரூராட்சி நிா்வாகம் எடுக்கவில்லை என பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டிய பேரூராட்சி நிா்வாகமே பள்ளிகளைச் சுற்றிலும் குப்பை மேட்டை உருவாக்கி வைத்திருப்பது சமூக ஆா்வலா்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மழைக்காலத்தில் நீா் புகுந்து மோசமான நிலையிலுள்ள பராமரிப்பற்ற கட்டடங்களால் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

எனவே, பள்ளியைச் சுற்றிலும் உள்ள பாழடைந்த கட்டடங்களை அகற்றி, குப்பை மேட்டை அகற்றி குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com