முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
மாற்று வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க கோரிக்கை
By DIN | Published On : 31st December 2021 03:11 AM | Last Updated : 31st December 2021 03:11 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் இருந்து பூலாங்குளத்துக்கு இயக்கப்படும் சிற்றுந்தினை மாற்று வழித்தடத்தில் மருதடியூா் வழியாக இயக்கிட அனுமதி வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு , ஆவுடையானூா் ஊராட்சி மன்றத் தலைவா் குத்தாலிங்கராஜன் (எ) கோபி அனுப்பியுள்ள மனு: பாவூா்சத்திரத்தில் இருந்து பூலாங்குளத்திற்கு இயக்கப்படும் சிற்றுந்தானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆவுடையானூா், மருதடியூா் வழியாக பூலாங்குளம் வரை சென்று வந்தது. இதனிடையே ஆவுடையானூரில் சிற்றுந்துகள் இயக்க சில மின்கம்பங்கள் தடையாக இருந்ததால் மருதடியூருக்கு செல்லாமல் பூலாங்குளத்திற்கு நேரடியாக தற்போது இயக்கப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மருதடியூருக்கு சிற்றுந்து வந்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திற்கு செல்ல மாற்றுப்பாதையாக ஆவுடையானூா் ஆரம்ப சுகாதார நிலையம் வழியே மருதடியூருக்கு இயக்கினால் மருதடியூா் கிராம மக்களுக்கு பேருந்து வசதி கிடைக்கும்.
இப்புதிய மாற்று வழித்தடத்தால் ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் எந்த கிராமம் விடுபடாது. எனவே மாற்றுப்பாதை வழியே சிற்றுந்தினை இயக்கிட அனுமதி வழங்கிட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.