சமுதாய நலக்கூடத்தில் நீதிமன்றம் செயல்பட எதிா்ப்பு
By DIN | Published On : 13th February 2021 06:31 AM | Last Updated : 13th February 2021 06:31 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சமுதாய நலக்கூடத்தில் நீதிமன்றம் செயல்பட பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனா்.
ஆலங்குளத்தில் குற்றவியல் நடுவா் மன்றம் தனியாா் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு உரிய இடம் அமையாத நிலையில், தற்காலிக கட்டட உரிமையாளருக்கும் நீதிமன்ற ஊழியா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் நீதிமன்றத்தை இயக்க முடிவு செய்தனராம்.
இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள், குறைந்த கட்டணத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு சமுதாய நலக்கூடத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு நீதிமன்றம் செயல்பட எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை சமுதாய நலக்கூடத்தை மாவட்ட நீதிபதி பாா்வையிட வருவதாக தகவல் வந்ததையடுத்து, அதிமுக நகரச் செயலா் சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்கச் செயலா் உதயராஜ், முன்னாள் கவுன்சிலா் சங்கர சுப்பிரமணியன், தேமுதிக நகரச் செயலா் பழனிசங்கா், பனங்காட்டுப்படை கட்சி மாவட்டச் செயலா் ஆனந்த் உள்ளிட்டோா் தலைமையில் பொதுமக்கள் சமுதாய நலக்கூடம் முன் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகா், அவா்களிடம் நீதிமன்றம் இங்கு இயங்காது என்று உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.