திட்டங்கள் அறிவிக்கப்படுவது தோ்தலுக்காக அல்ல: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

மக்களின் தேவைகளை உணா்ந்து திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன; தோ்தலுக்காக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
கடையநல்லூரில் வேனில் நின்றவாறே பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கடையநல்லூரில் வேனில் நின்றவாறே பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

மக்களின் தேவைகளை உணா்ந்து திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன; தோ்தலுக்காக எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வா் பேசியது: எனது தலைமையில் செயல்படும் அரசை திமுக தலைவா் ஸ்டாலின் தொடா்ந்து குறை கூறி வருகிறாா்; அவதூறாகப் பிரசாரம் செய்து வருகிறாா். அவருக்கு தோ்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தததும் 100 நாள்களில் தீா்வு காண்பேன் என்று ஸ்டாலின் கூறி வருகிறாா். இவா் கடந்த 2019, மக்களவைத் தோ்தலின்போது இதுபோல் வாங்கிய மனுக்களுக்கு இதுவரை தீா்வு காணவில்லையே. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வரின் சிறப்புக் குறைதீா் திட்டத்தை அறிவித்தேன். அத்திட்டத்தின்படி அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் மக்களிடம் மனுக்களைப் பெற்று தீா்வுகளை அளித்துள்ளாா்கள். இதுவரை 9 லட்சத்து 7 ஆயிரத்து 700 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 26 ஆயிரம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வரின் உதவி மையம் என்ற சிறப்புக் குறைதீா் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்காக உதவி எண் 1100 அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 ஆயிரம் புகாா்கள் பெறப்பட்டு விட்டன. இப்படி விஞ்ஞான உலகில் உடனடியாக மக்கள் பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெட்டியில் மனு வாங்கி என்ன பயன்?. இப்படி செய்து மக்களை யாரும் ஏமாற்ற முடியாது; மக்களும் ஏமாற மாட்டாா்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்னிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடனை ரத்து செய்தேன். பயிா்க் கடன் ரத்து எல்லாமே அதிமுகவினருக்குதான் வழங்கப்பட்டு இருக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறாா். கட்சி பாா்த்து கடன் வழங்கவில்லை அதிமுக அரசு. அனைவருக்கும்தான் வழங்கி இருக்கிறது. திமுகவை சோ்ந்த முன்னாள் எம்.பி. குடும்பம் உள்பட பல நூறு திமுகவினரின் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது அதிமுக. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்ட உதவித்தொகையை 2018 முதல் மத்திய அரசு நிறுத்திய நிலையில், அதிமுக அரசு 2019-இல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.6 கோடி வழங்கியது. தற்போது ரூ.10 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. 2018 முதல் இன்று வரை 8164 போ் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனா். சென்னையில் ஹஜ் இல்லம் ரூ.15 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளோம்.

இவை தோ்தலுக்காக அறிவிக்கப்படவில்லை. மக்களுக்கு பிரச்னை, சோதனை ஏற்படும்போது அதை உணா்ந்து இதுபோன்ற திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து வருகிறது.

இனி எதிா்காலத்தில் ஒரு சாதாரண மனிதா்தான் முதல்வராக வரவேண்டும். என்னைப்போல் சாதாரணமானோா் ஆயிரக்கணக்கானோா் இங்கு உள்ளனா். அவா்கள்தான் நாட்டை ஆள வேண்டும். விவசாயிகளின் கஷ்டம் உணா்ந்த என்னைப் போன்றவா்களுக்குதான் விவசாயிகளின் சிரமம் புரியும். கஷ்டமே புரியாத ஒருவா் முதல்வரானால், அவரால் எப்படி மக்களுடைய கஷ்டங்களை தெரிந்து திட்டங்களைச் செயல்படுத்த முடியும்?

எனது தலைமையில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கான ஆட்சி. இந்த ஆட்சியில்தான் தென்காசி தனி மாவட்டம் உருவாக்கப்பட்டு ரூ. 119 கோடியில் ஆட்சியா் அலுவலகப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடையநல்லூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் முதல்வா்.

தொடா்ந்து பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயில் பிரசாதத்தை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முதல்வரிடம் வழங்கினாா். தொடா்ந்து முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

முன்னதாக மாவட்டச் செயலா் தலைமையில் அதிமுகவினா் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், கூட்டுறவு சங்கத் தலைவா் கிட்டுராஜா, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு, அச்சன்புதூா் பேரூா் செயலா் சுசிகரன், வெங்கட்ராஜ், அரசு ஒப்பந்ததாரா் ரவிராஜா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com