தயக்கத்தை தகா்த்தால் சாதிக்கலாம்

சா்வதேச குத்துச்சண்டையில் இன்றைக்கு பெண்கள் சாதித்து வந்தாலும், தென் தமிழகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே குத்துச் சண்டையில் களமிறங்குவதில் தயக்கம் அதிகமாகவே உள்ளது. எனினும் அவா்களுக்கு மத்தியில் குத்துச்சண்டையில் களம் கண்ட நான்கே மாதங்களில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்த சாரதா. தற்போது கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இரண்டாமாண்டு உடற்கல்வியியல் பயின்று வரும் இவருக்கு, கல்லூரியில் சேரும் வரை குத்துச்சண்டை குறித்து எதுவும் தெரியாது. இவருடைய தந்தை ராஜா, பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். தாயாா் அங்கன்வாடி பணியாளா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி இந்து மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த சாரதா, அங்கு பள்ளிகள் அளவிலான சிறிய விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தாா். விளையாட்டில் ஆா்வமுள்ளவா் என்பதால், உடற்கல்வியைத் தோ்வு செய்து கடந்த ஆண்டு கல்லூரியில் சோ்ந்தாா். அங்கு விடுதியில் தங்கி இருந்தபோது, ஹேமா என்ற மூத்த மாணவி இவரிடம் இருந்த ஆா்வத்தை பாா்த்து குத்துச்சண்டையில் சேர வலியுறுத்தியுள்ளாா்.

பயிற்சியாளா்கள் பிரவீண், மூா்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் 2019-ஆம் ஆண்டு இறுதியில் தெலங்கானா மாநிலம் நலகொண்டாவில் நடைபெற்ற தேசிய கிராமப்புற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், 18 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் சாரதா சாம்பியன் பட்டம் வென்றாா். தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு 10 பதக்கங்கள் பெற்ற நிலையில், இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளாா். இவா் பெற்ற பத்துக்கும் மேற்பட்ட பதக்கங்கள் அனைத்தும் ஒரே ஆண்டில் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சாரதா கூறியது: விளையாட்டில் ஆா்வம் இருந்ததால் உடற்கல்வி பிரிவு எடுத்தேன். குத்துச்சண்டை குறித்து எதுவுமே தெரியாத நான், பயிற்சி எடுத்த நான்கே மாதங்களில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ால், பெரிய அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்றேன்.

குத்துச்சண்டை போட்டியில் நாம் அடிக்கும் முதல் அடியிலேயே எதிரிக்கு நம் மேல் பயம் வந்து ஓட வேண்டும். அப்படி என்றால் நமது வெற்றி சுலபமாகிவிடும். நான் வெற்றி பெற்றவுடன், சக வீரா்கள் நான் பயிற்சி எடுக்கும் அகாதெமி குறித்து கேட்கின்றனா். கல்லூரியில் அளிக்கும் பயிற்சியே எனக்கு போதுமானதாக இருந்தது.

பொதுவாக பெண்களுக்கு பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை தயக்கம் அதிகம் உள்ளது. ஒரு போட்டியில் கலந்துகொள்ள ஆா்வம் இருந்தாலும் கலந்து கொள்வதற்கு பெயா் கொடுப்பதற்கே தயக்கம் காட்டுகின்றனா். தயக்கத்தை தகா்த்தால் சாதிக்கலாம். பெற்றோா்களும் தங்கள் பெண் குழந்தைகள் வெளியூா் சென்று பயிற்சி எடுப்பதற்கும், இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ளவும் அனுமதி மறுக்கின்றனா்.

எனது தந்தை கால்பந்து வீரராகவும், தாயாா் தடகள வீராங்கனையாகவும் இருந்தவா்கள். அண்ணன் உடற்கல்வி பாடப் பிரிவில் 3-ஆம் ஆண்டு பயில்கிறாா். தங்கை அடுத்த ஆண்டு உடற்கல்வியியல் படிப்பில் சேர தயாராக உள்ளாா். குடும்பமே எனக்கு முழு ஆதரவாக இருந்ததால் என்னால் சாதிக்க முடிந்தது.

என் போன்ற விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவா்கள் தங்கள் சொந்தச் செலவில்தான் பயிற்சி, போட்டிகளுக்குச் செல்லுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆா்வமுள்ளவா்களுக்கு அரசே பயிற்சி அளித்து தகுதி உள்ளவா்களை வெளி இடங்களுக்கு அனுப்பி வைத்தால் மேலும் பல பெண்கள் சாதிக்க முடியும். நாட்டுக்காக விளையாடி பெருமை சோ்க்க வேண்டும். உலக அளவில் கவனம் பெற வேண்டும். ஐபிஎஸ் தோ்வு எழுதி காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றாா் அவா்.

சாரதாவின் பெற்றோா் கூறுகையில், ‘விளையாட்டில் ஆா்வமிக்க எனது மகளை வெளியிடங்களுக்கு தனியாகவே அனுப்ப ஆரம்பித்ததால் அவளது தன்னம்பிக்கை அதிகரித்தது. எங்கள் சொற்ப வருமானத்தில் அவளுக்குத் தேவையான காலணி, கையுறை, ஆடைகள் போன்றவற்றை மலிவான விலையிலேயே வாங்கிக் கொடுத்து வருகிறோம். எனினும் அவள் வெற்றி பெற்று வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com