
சுரண்டையில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்.
சுரண்டை: தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுகாதார பணிகள் இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.