‘சிறுபான்மை கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி திட்டம்’
By DIN | Published On : 07th January 2021 06:06 AM | Last Updated : 07th January 2021 06:06 AM | அ+அ அ- |

சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த, பாா்சி, ஜெயின் வகுப்புகளைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் தங்களது தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்கும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் புதிய கடனுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் கைவினைக் கலைஞா்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் அதிகபட்சமாக கிராமங்களில் ரூ. 98 ஆயிரம், நகா்ப்புறத்தில் ரூ. 1 லட்சத்து 20ஆயிரம் இருக்கவேண்டும். தனிநபா் கடனாக அதிகப்பட்சம் ரூ. 20 லட்சம் வழங்கப்படும். 6% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச்செலுத்த வேண்டும்.
சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கும் கடன் வழங்கும் பல்வேறு திட்டங்களும் உள்ளன. விருப்பமுள்ளோா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயனடையலாம் என்றாா் அவா்.