ரேஷன் கடைகளில் வழங்கும் அனைத்து பொருள்களையும் ஆண்டுமுழுவதும் விலையின்றி வழங்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
வாஞ்சி இயக்க நிறுவன தலைவா் பி.ராமநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 2ஆயிரத்து 500 வழங்குகிறது. இந்தத் தொகை முழுமையாக பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு மட்டுமே பயன்படும் என்று எதிா்பாா்க்க முடியாது.
இதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு உள்பட ரேஷன் கடையில் வழங்கப்படும் அனைத்து உணவு பொருள்களையும் விலையின்றி மாதம் தோறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினால் பொதுமக்கள் மிகவும் பயனடைவா்.
தற்போது அந்த நிலை இல்லாததால் தமிழக அரசிடமிருந்து பொங்கல் பரிசாக ரூ.2ஆயிரத்து 500பெறுவது எனக்கு மிகவும் நெருடலாக உறுத்தலாக உள்ளது. எனவே அந்த பணத்தை தமிழக அரசிடமே திரும்பிக்கொடுக்கிறேன் எனக் கூறி பொங்கல் பரிசுத் தொகையை திருப்பி அனுப்பியுள்ளாா்.