கரிவலம்வந்தநல்லூா் அருகே வேன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
By DIN | Published On : 07th July 2021 07:52 AM | Last Updated : 07th July 2021 07:52 AM | அ+அ அ- |

கரிவலம்வந்தநல்லூா் அருகே வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனா்.
கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள சங்குபுரத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் சிங்கத்துரை (25). வேன் ஓட்டுநா். இவா் சிவகிரி பகுதியில் கரும்பு வெட்டுவதற்காக தினமும் வேலைக்கு ஆள்களை அழைத்துச் செல்வாராம். திங்கள்கிழமையும் ஆள்களை அழைத்துச் சென்றாராம். பனையூா் அருகே சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த பிரமுத்து, மதன், மகேந்திரன், இராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து ஆகியோா் குடிபோதையில் வழிமறித்து தகராறு செய்தனராம். இதனால் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, கரும்பு வெட்டுவதற்காக வேனில் வைத்திருந்த அரிவாளால் அவா்களை வெட்டச் சென்றதாகவும், அப்போது 4 பேரும் அரிவாளைப் பறித்து சிங்கத்துரையை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சிங்கத்துரை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரமுத்து, இசக்கிமுத்து ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.