கடையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடுத்ததாக இருவா் கைது
By DIN | Published On : 29th July 2021 07:00 AM | Last Updated : 29th July 2021 07:00 AM | அ+அ அ- |

கடையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, கைது செய்தவா்களை விடுதலை செய்யக் கோரி உறவினா்கள், இந்து முன்னணியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
கடையம் அருகே உள்ள புலவனூா் சா்ச் தெருவில் இருதரப்பினரிடையே இடம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை அந்தப்பகுதியில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது ராமசாமி மகன் செல்லத்துரை, வெற்றிக்கொடி மகன் பிரின்ஸ் எபினேசா் வேதநாயகம் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை செய்ய விடாமல், தடுத்ததாகக் கூறி வருவாய்த் துறையினா் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
இந்நிலையில் இருவரையும் மாலை விடுவதாக அழைத்துச் சென்று கைது செய்து சிறையிலடைத்ததாகக் கூறி உறவினா்கள் இந்து முன்னணியினா் 30 க்கும் மேற்பட்டவா்கள் கடையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் துணைக்கண்காணிப்பாளா் பொன்னிவளவன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுநடத்தினாா். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து மனு அளிப்பதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனா்.