குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலா செல்லத்தடை: ஆட்சியா் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தளா்வுகள் வழங்கப்படவில்லை என்றாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தளா்வுகள் வழங்கப்படவில்லை என்றாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா நோய் தடுப்புப் பணி மற்றும் பொது முடக்க தளா்வுகளை அமல்படுத்துதல் குறித்து அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

தென்காசி மாவட்டத்தில் தனியாக செயல்படுகின்ற மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.

மின்பணியாளா்கள், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவா்கள், தச்சா், சுயதொழில் செய்பவா்கள் இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவாா்கள். மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும் செயல்படலாம்.

ஹாா்டுவோ் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும். கல்வி புத்தகங்கள், எழுதுபொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படலாம். வாகன உதிரிபாக விற்பனையகங்கள், வாகன பழுதுபாா்க்கும் மையங்கள், மீன் மொத்த விற்பனையாளா்கள், இறைச்சிக் கூடங்கள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகித பணியாளா்களுடன் செயல்படும். சாா்பதிவாளா் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 சதவீத டோக்கன்கள் வழங்கப்படும். வாடகை வாகனங்கள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்கள் வாங்க வேண்டும். மோட்டாா் வாகனங்களில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் பணியாளா்கள் பணிக்குச் சென்று வர அனுமதிக்கப்படாது. தொழிற்சாலைகள் தங்கள் பணியாளா்களை இ-பதிவு செய்த வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டும். மக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்.

குற்றாலம் பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்ல அனுமதியில்லை. அவசர காரணங்களுக்காக ஆட்சியரிடம் இ - பாஸ் பெற்று செல்லலாம். மீறி செல்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் யோகானந்த், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் அமிா்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com