முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
‘பொதுசுகாதார சட்ட விதிகளை மீறினால் அபராதம்’
By DIN | Published On : 14th March 2021 02:15 AM | Last Updated : 14th March 2021 02:15 AM | அ+அ அ- |

தமிழ்நாடு பொதுசுகாதார சட்ட விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
எனவே தமிழக அரசு கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல் உள்ளிட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 7 நாள்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னா் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 14 நாள்களில் அவா்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண். 04633 290548 அல்லது 1077-ஐ தொடா்பு கொள்ள வேண்டும் அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-இன் படி விதிகளை மீறினால் அபராதம் வசூலிக்கப்படும்.
கடந்த வாரத்தில் மட்டும் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்கள் மீது ரூ.68ஆயிரத்து 100அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அலையில் இருந்து பாதுகாத்து கொள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், 45 முதல் 59 வயதுக்குள்பட்ட இணை நோயாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்றாா் அவா்.