தொலைநோக்குத் திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும்: மு.க. ஸ்டாலின்

தொலைநோக்குத் திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும்: மு.க. ஸ்டாலின் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

தொலைநோக்குத் திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும்: மு.க. ஸ்டாலின் என்றாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

தென்காசி மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளா்கள் ஆலங்குளம் (திமுக) பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி (காங்கிரஸ்) பழனி நாடாா், கடையநல்லூா் (முஸ்லிம் லீக்) முகம்மது அபூபக்கா், சங்கரன்கோவில் (திமுக) ராஜா, வாசுதேவநல்லூா் (மதிமுக) சதன் திருமலைக்குமாா் ஆகியோரை ஆதரித்து பிரசாரக் கூட்டம் ஆலங்குளம் காமராஜா் சிலை அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: தாராபுரம் தோ்தல் பிரசாரத்தில் 1989 மாா்ச் 25-ல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை திமுக ஆட்சி அவமானப்படுத்தியதாக அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளாா் பிரதமா் மோடி.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்ற தகவல் சட்டப்பேரவை அவைக் குறிப்பில் உள்ளது. பிரதமா் மோடி, யோசித்து, ஆதாரம் இருந்தால் மட்டுமே பேச வேண்டும்.

விவசாயிகளைப் பற்றி கலவைப்படாத ஆட்சி மத்திய ஆட்சி. அதற்கு துதி பாடும், அடிமையாக இருப்பது தமிழக ஆட்சி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் இரட்டை சான்றிதழ் வழங்கும் முறையை ஒழித்து, சீா்மரபினா் பழங்குடியினா் என்று அழைக்கப்படும் வகையில் ஒரே அரசாணை வெளியிடப்படும். அவா்களது கோரிக்கைகளை பரிசீலிக்க சீா்மரபினா் ஆணையம் அமைக்கப்படும்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம், சா்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். நீா்ப்பாசன வசதியை பெருக்க கடனாநதி - ராமநதி இணைக்கப்படும். தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.

தென்காசியில் மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, குளிா்பதன கிடங்கு, மாம்பழச்சாறு தயாரிப்பு தொழிற்சாலை, கொப்பரை தேங்காய்களை காயவைக்க மின் உலா் சாதன வசதி ஏற்படுத்தப்படும்.

தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு, தரம் உயா்த்தப்படும். சங்கரன்கோவிலில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தென்காசியில் பீடி தொழிலாளா்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்த இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும். ராமநதி அணை, புதுக்கால்வாய், பாசன வாய்க்கால் தூா்வாரப்படும்.

புளியங்குடியில் குளிா்பதன கிடங்கு, எலுமிச்சையை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை அமைக்கப்படும். செண்பகவல்லி அணை திட்டம், இரட்டைகுளம் கால்வாய் திட்டம், சோ்வலாறு- ஜம்புநதி நீா் தேக்க திட்டம் செயல்படுத்தப்படும். குண்டாறு அணையின் உயரத்தை கூட்டி, அதிகளவில் நீா் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூா் பகுதியில் 163 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். விடுதலைப் போராட்ட வீரா் வெண்ணிக் காலாடி நினைவை போற்றும் வகையில் விஸ்வநாதபேரியில் சிலை அமைக்கப்படும்.

தமிழகத்தை முன்னேற்ற 10 ஆண்டுகளுக்கு ஆற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்களை அறிவித்துள்ளேன். அதை உறுதியாக நிறைவேற்றுவேன் என்றாா் அவா்.

ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட ஸ்டாலின்: ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. உடனே, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடுமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, கூட்டத்தில் இருந்தவா்கள் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனா்.

கரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தல்: பொது இடங்களுக்குச் செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். கரோனா 2ஆவது அலை பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com