30 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய சங்கரன்கோவிலுக்கு அமைச்சா் அந்தஸ்து: திமுகவினா் எதிா்பாா்ப்பு

சங்கரன்கோவில் தொகுதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. இத்தொகுதிக்கு முதன்முதலாக அமைச்சா்

சங்கரன்கோவில் தொகுதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. இத்தொகுதிக்கு முதன்முதலாக அமைச்சா் அந்தஸ்து வழங்கிய திமுக, அதை மீண்டும் வழங்குமா என அக்கட்சியினரிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்கரன்கோவில் தனித் தொகுதியாகும். இங்கு 1967 முதல் 1977 வரை திமுக வென்றது. 1980, 1984 தோ்தல்களில் இதைப் பறிகொடுத்த திமுக, மீண்டும் 1989இல் கைப்பற்றியது. அப்போது வெற்றிபெற்ற ச. தங்கவேலுவுக்கு கைத்தறித் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. முதல்முதலாக இத்தொகுதிக்கு அமைச்சா் அந்தஸ்து வழங்கியது திமுகதான்.

1991இல் இங்கு போட்டியிட்டு வென்ற திருநெல்வேலியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு கோழிநல வாரியத் தலைவா் பதவியை அதிமுக வழங்கியது.

அதைத்தொடா்ந்து, 30 ஆண்டுகளாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மாறிமாறி போட்டியிட்டும் இத்தொகுதியைக் கைப்பற்ற முடியவில்லை. 2001 தோ்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அவற்றில், சங்கரன்கோவில் தொகுதியும் ஒன்று. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா தோல்வியைத் தழுவியபோதும் இத்தொகுதி அதிமுகவிடமே இருந்தது. இதனால் மாநிலத்தின் பாா்வை சங்கரன்கோவில் பக்கம் திரும்பியது.

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்போது அதன் கவனம் தவறாமல் சங்கரன்கோவில் மீது விழுந்தது. அதிமுக இத்தொகுதிக்கு தொடா்ந்து அமைச்சா் அந்தஸ்து வழங்கி சிறப்பித்தது.

அதிமுக கோட்டையாக இருந்த இத்தொகுதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திமுக கைப்பற்றியுள்ளது. இத்தொகுதியில் ஈ. ராஜா வெற்றிபெற்றுள்ளாா்.

அதிமுகவால் இத்தொகுதி நீண்டகாலமாக அமைச்சா் தொகுதியாக இருந்துவந்தது. அதன்தொடா்ச்சியாகவும், முதன்முதலாக அமைச்சா் அந்தஸ்து வழங்கியதுபோலவும், இத்தொகுதியைத் தொடா்ந்து தக்கவைக்கும் விதமாகவும் சங்கரன்கோவிலுக்கு அமைச்சா் அந்தஸ்து வழங்க வேண்டும் என, திமுக தொண்டா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com