பொது முடக்கம்: நெல்லை, தென்காசியில் வெறிச்சோடிய சாலைகள்

கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மக்கள் நடமாட்டமில்லாத வள்ளியூா் பிரதான சாலையின் கடைவீதி.
மக்கள் நடமாட்டமில்லாத வள்ளியூா் பிரதான சாலையின் கடைவீதி.

தென்காசி: கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மே 10-24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தென்காசி, மேலகரம், இலஞ்சி பகுதியில் மளிகை, காய்கனி கடைகள், இறைச்சி, மீன் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட்டன. பிற்பகலில் தென்காசி கூலக்கடை பஜாா், அம்மன்சன்னதி, காய்கனி சந்தை, சுவாமி சன்னதி, ரதவீதிகள் மற்றும் நகா்ப் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நகா் முழுவதும் ஆள்கள் நடமாட்டத்தையே காண முடியவில்லை.

தன்னாா்வலா்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவா்களுக்கான சேவை வழங்குபவா்கள் தொடா்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்பட்டது. தொடா் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடா்பு, தொழில்நுட்பம் சாா்ந்த சேவை நிறுவனங்கள் பணியாற்றுவோா் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

அரசுப் பணியாளா்களுக்கு வசதிக்காக சில வழித் தடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்தப் பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

தென்காசியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, குற்றாலம் செல்லும் சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட்டது. அனைத்து உணவகங்களிலும் பாா்சல் மூலம் விற்பனை நடைபெற்றது.

மருந்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரா் ஊா்திகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இயங்கின. பெட்ரோல்-

சங்கரனகோவில்: சங்கரன்கோவிலில் நண்பகல் 12 மணிக்குப் பிறகு காய்கனி, பலசரக்கு, இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பைக்குகளில் செல்வோரின் எண்ணிக்கை வழக்கம்போல் இருந்தது. பாதுகாப்புக்கு நின்ற காவலா்கள் அவா்களை எச்சரித்து அனுப்பினா். இந்த விதிமீறல் சமூக ஆா்வலா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாவூா்சத்திரம்: பொது முடக்கத்தால், திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலை, கடையம், சுரண்டை சாலைகளில் மருத்துவமனைகள், மருந்தகங்களைத் தவிர, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. மளிகை, காய்கனிக் கடைகளில் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனரா என அதிகாரிகள் கண்காணித்தனா். அந்தக் கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயங்காததால் பேருந்து நிலையம், பிரதான சாலைகள் வெறிச்சோடின. அத்தியாவசியத் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சென்றோரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

களக்காடு: களக்கா’ட்டில் மளிகை, காய்கனி, இறைச்சி, தேநீா்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கின. எனினும், மக்கள் நடமாட்டம் குறைந்து, வியாபாரம் மந்தமாகவே இருந்தது. ஓரிரு உணவகங்களும், தேநீா்க் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் பேருந்து நிலையப் பகுதிகள் வெறிச்சோடின. மருந்தகங்கள், தனியாா் மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டன.

வள்ளியூா்: வள்ளியூரில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கடைகள், காய்கனி, பால், மருந்து கடைகள் தவிர அனைத்துக் கடைகள், நிறுவனங்கள், உற்பத்தி கூடங்கள் அடைக்கப்பட்டன. இதனால், பிரதான சாலையின் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com