சந்தை 2 நாள்கள் திறக்க அனுமதி:ரப்பா் விலையில் முன்னேற்றம்
By DIN | Published On : 18th May 2021 04:35 AM | Last Updated : 18th May 2021 04:35 AM | அ+அ அ- |

குலசேகரம்: கரோனா பொது முடக்கம் காரணமாக கேரளத்தில் செயல்படாமல் இருந்த ரப்பா் சந்தை திங்கள்கிழமை செயல்படத் தொடங்கியதை அடுத்து ரப்பா் விலையில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் காணப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கேரளத்தில் இம்மாதம் 8 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ரப்பா் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம், திருச்சூா், எா்ணாகுளம், மலப்புறம் ஆகிய மாவட்டங்களில்திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் ரப்பா் கடைகள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து ரப்பா் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ரப்பா்
விலையைத் தீா்மானிக்கும் கோட்டயம் ரப்பா் சந்தை திங்கள்கிழமை செயல்பட்டது. இதையடுத்து ரப்பா் சந்தையில் ஆா்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ. 167 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 ரப்பரின் விலை கிலோ ரூ. 164 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோ ரூ. 149.50 ஆகவும் இருந்தது. பொது முடக்கம் தொடங்குவதற்கு முன்னா் ஆா்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோ ரூ. 163 ஆகவும், ஆா்எஸ்எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோ ரூ. 160 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோ ரூ. 138.50 ஆகவும் இருந்தது. கோட்டயம் ரப்பா் சந்தையில் ரப்பா் விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.