சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தவணையை நிறுத்திவைக்கக் கோரி முதல்வருக்கு மனு
By DIN | Published On : 20th May 2021 07:31 AM | Last Updated : 20th May 2021 07:31 AM | அ+அ அ- |

சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகைகளை ஆறு மாதங்கள் நிறுத்திவைக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ப.சட்டநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
சிறு தொழில்நிறுவனங்களின் கடன்தவணை தொகையை ஆறுமாதங்களுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசிற்கு கடிதம் எழுதியதற்கு சிறுகுறு தொழில் நடத்துபவா்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நிதிநிறுவனங்கள் கந்துவட்டிக்காரா்களை விட மிகக் கொடூரமாக பெண்களிடம் கடன் தவணை தொகைககளை கட்ட நெருக்கடி கொடுத்து துன்புறுத்தி வருகின்றனா். நிதி நிறுவன ஊழியா்கள் பலா் முன்னிலையில் அவதூறாக பேசி கடன்தொகையை வலுக்கட்டாயமாக வசூலித்து வருகின்றனா்.
இதனால் பொதுமக்கள் அவமானங்களுக்கு அஞ்சி, வீட்டில் உணவு கூட செய்யாமல் பணத்தை செலுத்துகின்றனா். எனவே, இந்த நிதி நிறுவனங்களை அரசு கண்காணித்து கட்டுப்படுத்தி ஆறு மாதங்களுக்கு கடன்தவணை தொகையை வசூலிக்க தடைவிதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.