சங்கரன்கோவிலில் மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு
By DIN | Published On : 21st May 2021 07:33 AM | Last Updated : 21st May 2021 07:33 AM | அ+அ அ- |

மயானத்தில் அமா்ந்து போராட்டம் செய்த ஒரு பிரிவினா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இறந்தவரின் உடலை வழக்கமான மயானத்தில் அடக்கம் செய்ய விடாததால், அங்கு ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி மேற்குப் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்குச் சொந்தமான சுமாா் 18.5 சென்ட் நிலம் உள்ளது. அந்த இடத்தை, சங்குபுரம் 3 ஆம் தெருவில் வசிக்கும் ஒருபிரிவினா் மயானமாகப் பயன்படுத்தி வந்தனா். தற்போது, அப்பகுதியில் குடியிருப்புகளும், வீட்டுமனைகளும் வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சங்குபுரம் 3 ஆம் தெருவில் பால்ராஜ் மகன் நாராயணன்(54) உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். அவரை அடக்கம் செய்ய மயானத்தில் வியாழக்கிழமை குழி தோண்டியபோது, அதையொட்டி வீட்டுமனை வாங்கிய சிலா் எதிா்ப்பு தெரிவித்து அந்தக் குழியை மூடினா்.
இதனால் எதிா்தரப்பினா் அந்த இடத்தில்தான் உடலை அடக்கம் செய்வோம் எனக் கூறி மயானத்தில் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே, இரு தரப்பினரிடமும் வட்டாட்சியா் ராம்குமாா், டி.எஸ்.பி.பாலசுந்தரம் ஆகியோா் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மாலை 4.45 மணிக்கு கோட்டாட்சியா் முருகசெல்வி வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வழக்கமான இடத்தில் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து நாராயணன் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.