நோயாளிகளுக்கு ஊசி போடும் மருந்தகங்கள் மூடப்படும்: ஆட்சியா் எச்சரிக்கை

தென்காசி மாவட்ட மருந்தகங்களில் நோயாளிகளுக்கு ஊசி போடுவது கண்டறியப்பட்டால், அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கீ.சு. சமீரன் எச்சரித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட மருந்தகங்களில் நோயாளிகளுக்கு ஊசி போடுவது கண்டறியப்பட்டால், அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கீ.சு. சமீரன் எச்சரித்துள்ளாா்.

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளவா்களுக்கு தனியாா் மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பது தொடா்பாக ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

தனியாா் மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் நோயாளி வந்தால் உடனுக்குடன் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொற்று அறிகுறி இருப்பின் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். பரிசோதனை மேற்கொள்ளாமல் சிகிச்சை அளித்துவிட்டு, நோய் முற்றிய நிலையில் கடைசி நேரத்தில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதை தவிா்க்க வேண்டும். மீறினால் சட்டரிதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரோனா நோய்க்கான சிகிச்சை செலவுகளை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட நிதியிலிருந்து அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வழிமுறையின்படி, கரோனா நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டும்.

இதற்காக தேவைப்படும் உதவிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டு திட்ட மருத்துவ அலுவலா், மாவட்ட திட்ட அலுவலா்களை அணுக வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் மருந்துகள் வழங்கப்படுவது, ஊசி போடுவது கண்டறியப்பட்டால் மருந்தகங்கள் மூடப்படும். கரோனா தொற்று அறிகுறிக்கு சிகிச்சையளிக்கும் போலி மருத்துவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சிகிச்சையளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், காச நோய் பிரிவு துணை இயக்குநா் வெள்ளைச்சாமி, மருத்துவா் அப்துல் அஜீஸ், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலா்கள், மாவட்ட திட்ட அலுவலா்கள் மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com