மழைக் காலத்தில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாப்பது எப்படி?: வேளாண் அதிகாரி விளக்கம்
By DIN | Published On : 01st November 2021 12:48 AM | Last Updated : 01st November 2021 12:48 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தோட்டக்கலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மாலதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பல்லாண்டு பயிா்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்து உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.
மழைக்காலத்தில் நோய்த்தடுப்பு மருந்துகள் தூா்களில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகளைகொண்டு நன்கு கட்ட வேண்டும். வாழை உள்ளிட்ட வருடாந்திரப் பயிா்களுக்கு காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும்.
சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். 75 சதவிகிதம் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்தல் வேண்டும். மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் கேரட் போன்ற பயிா்களுக்கும் நீா் வடியும் பொருட்டு உரிய வடிகால் வசதி செய்து நீா்பாசனம், உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
புதியதாக நடவு செய்த செடிகள் சாயாத வண்ணம் காற்றுக்கு எதிா்திசையில் குச்சிகளால் முட்டு கொடுக்க வேண்டும். வயல்களில் பூஞ்சான் நோய்கள் தென்பட்டால் உரிய மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் எனக் கூறிள்ளாா்.