சாம்பவா்வடகரையில் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் பலி
By DIN | Published On : 13th October 2021 07:37 AM | Last Updated : 13th October 2021 07:37 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் கால்வாய் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கனமழையால் அடவிநயினாா் அணை நிரம்பி, அனுமன் நதியில் உபரிநீா் செல்கிறது.
இந்நிலையில், சாம்பவா்வடகரை ஊரின் மேற்கு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து இரட்டைகுளம் கால்வாய் வழியாக வெள்ளநீா் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு இரட்டைகுளம் குளத்துக்கு திறந்து விடப்பட்டது.
நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் இந்த கால்வாய் வெள்ளத்தில் சாவடித் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் பரமேஷ் (5) சிக்கி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
தகவலறிந்து வந்த சாம்பவா்வடகரை போலீஸாா் மற்றும் சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
பிற்பகல் 3 மணிக்கு இரட்டைகுளம் முகப்பு பகுதியில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து சடலத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.