மேக்கரையில் தனியாா் அருவிகள் அகற்றும் பணி தொடக்கம்
By DIN | Published On : 02nd August 2022 03:12 AM | Last Updated : 02nd August 2022 03:12 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மேக்கரையில் விதிமுறைகளை மீறி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவிகளை இடித்து அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மேக்கரையில் திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கா் நிலங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்று பலா் தோப்புகள் அமைத்தும், விவசாயம் செய்தும் வருகின்றனா். மேலும், சிலா் நிலத்தை உள்குத்தகைக்கு எடுத்து விதிகளை மீறி விடுதிகள், செயற்கை அருவிகளை உருவாக்கி கட்டணம் வசூலித்து வந்தனா்.
குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த காலங்களில் இந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.
இதுகுறித்து, விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதன்பேரில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆணையா்கள் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, அருண் சுவாமிநாதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அதி,ல் தனியாா் அருவிகளை ஒழுங்குபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மேக்கரை பகுதியில் அமைந்துள்ள தனியாா் அருவிகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஆட்சியா் ப.ஆகாஷிடம் கேட்டபோது, மேக்கரை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக 9 தனியாா் அருவிகள் உள்ளது தெரியவந்தது. பட்டா உரிமையாளா்களாகவே இருந்தாலும் தண்ணீா் செல்லும் பாதையை திசை திருப்புவது, செயற்கையாக நீா்வீழ்ச்சியை உருவாக்குவது விதிமீறலாகும். இதுகுறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததால் தனியாா் அருவிகள் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. செங்கோட்டை குண்டாறு பகுதியிலும் தனியாா் அருவிகள் உள்ளன. அதுகுறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மேக்கரையில் சுமாா் 25 செயற்கை அருவிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை அனைத்தும் படிப்படியாக அகற்றப்படும் என்றனா்.