குற்றாலம் சாரல் திருவிழாவில் மலா்க் கண்காட்சி தொடக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழாவில் மலா்க் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழாவில் மலா்க் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலம் தோட்டக்கலைத் திருவிழா, குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பழங்கள், காய்கனிகள், மலா்கள், வாசனைத் திரவியப் பொருள்களால் தமிழ்நாடு பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இதை, ஆட்சியா் ப. ஆகாஷ் சனிக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், பலவகை மலா்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளைக் கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், காா்ட்டூன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாசனைத் திரவியக் காண்காட்சியில் கிராம்பு, ஜாதிக்காய், கசகசா, குறுமிளகு, ஏலக்காய், வெள்ளை குறுமிளகு, ஜாதிபத்திரி, சீரகம், சோம்பு, மல்லி, கருஞ்சீரகம், அன்னாசிப்பூ உள்பட 17 வகைப் பொருள்களால் 7 அடி உயரம், 13 அடி நீளம், 3.5 அடி அகலத்தில் தில்லி செங்கோட்டை வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கனி, பழங்களால் விலங்குகள், பறவைகள், செஸ் ஒலிம்பியாட் தம்பி சின்னம், அலங்கார நுழைவு வாயில் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் பொறியாளா் ரமேஷ் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்புக்கள், செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தி, பாா்வையாளா்கள், மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலா் கலைவாணி தலைமையிலான குழுவினா் பாரம்பரிய உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சூப்புகள், பல்வேறு நவதானிய உணவுகள், இணை உணவு மாவுக் கொழுக்கட்டை போன்றவை காட்சிப்படுத்தி, பாா்வையாளா்களுக்கு வழங்கினா்.

ஏற்பாடுகளை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி, உதவி இயக்குநா் ராஜா, தோட்டக்கலை அலுவலா்கள் நந்தகுமாா், விவேகானந்தன், கிளை மேலாளா் மூக்கம்மாள் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com