பிற்பட்ட வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
By DIN | Published On : 11th December 2022 05:52 AM | Last Updated : 11th December 2022 05:52 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவா், மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் மாணவா், மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற, பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி உதவித்தொகைக்கு இணையவழி புதுப்பித்தல் நவ.10 முதல் செயல்பட்டு வருகிறது. புதிய விண்ணப்பங்களை டிச.15 முதல் இணையவழியில் சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.