திருவேங்கடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைத்த கிராம மக்கள்
By DIN | Published On : 01st January 2022 02:38 AM | Last Updated : 01st January 2022 02:38 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே மைதானத்தில் நடக்கவிருந்த விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி மறுத்ததால், 300க்கும் மேற்பட்டோா் தங்களது குடும்ப அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் நிகழாண்டில் விளையாட்டுப் போட்டி நடத்த கிராம மக்கள் காவல்துறையிடம் அனுமதி கோரினா். ஆனால் அவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குறிஞ்சாக்குளம் கிராம மக்கள் சுமாா் 300க்கும் மேற்பட்டோா், ஊா்வலமாக திருவேங்கடம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்றனா். இதனால் வருவாய்த் துறையினா், காவல்துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் திருவேங்கடம் வட்டாட்சியா் சத்தியவள்ளியிடம் தங்களது வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.