திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
By DIN | Published On : 10th June 2022 11:48 PM | Last Updated : 10th June 2022 11:48 PM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூக்குழித் திருவிழாவில் 205 போ் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் வைகாசி மாதம் 12 நாள்கள் நடைபெறும் பூக்குழித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ாகும். நிகழாண்டில் இத்திருவிழா கடந்த மாதம் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சக்திகும்பம், சுவாமி- அம்பாள் காட்சி கொடுத்தல், திருக்கல்யாணம்,திருவிளக்குப் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9 ஆம் திருநாளான வியாழக்கிழமை திரௌபதியம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை இரவு முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழாவும் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு சக்தி நிறுத்துதல், அக்னி வளா்த்தல் ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணியளவில் சுவாமி- அம்பாள் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி கரக ஆட்டத்துடன் வீதியுலா வந்து பூக்குழி நடைபெறும் இடத்துக்கு வந்தனா்.
தொடா்ந்து, பக்தா்கள் பூக்குழி இறங்கினா். அதில் சிலா் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு அக்னி குண்டதில் இறங்கினா். 24 பெண்கள் உள்ளிட்ட 205 போ் பூக்குழி இறங்கினா். இவ்விழாவில் ஈ.ராஜா எம்.எல்.ஏ., நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், பூக்குழி நிகழ்வை காண உள்ளூா் மட்டுமன்றி கரிவலம்வந்தநல்லூா், சிந்தாமணி, சுப்புலாபுரம், அத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்தனா்.
விழா நாள்களில் தினமும் கோயில் வளாகத்தில் திருமுறை இன்னிசை, இன்னிசை நிகழ்ச்சி, சமயச்சொற்பொழிவு, சிறப்புப் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத்தினா் செய்திருந்தனா்.