முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கேரளம் செல்லும் கனிமவளம்: புளியரையில் மே 16இல் மறியல்
By DIN | Published On : 13th May 2022 01:10 AM | Last Updated : 13th May 2022 01:10 AM | அ+அ அ- |

கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டுசெல்லப்படுவதை தடை செய்யக் கோரி, புளியரையில் மே16ஆம் தேதி மறியல் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு முறையான அனுமதியின்றியும், அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, இரு மாநில எல்லையான புளியரையில் இம்மாதம் 16ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கங்காதேவி தலைமையில் சமாதானக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி மணிமாறன், புவியியல்- சுரங்கத் துறை உதவி இயக்குநா் வினோத், வட்டார போக்குவரத்து அலுவலா் ஆனந்த், செங்கோட்டை வட்டாட்சியா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ கே.ரவிஅருணன், ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக்குழு அமைப்பாளா் இராம.உதயசூரியன், சமூக ஆா்வலா் சு.ஜமீன், கீழக்கடையம் ஊராட்சித் தலைவா் பூமிநாத், தேவசகாயம் உள்பட பலா் பங்கேற்றனா்.
கே.ரவிஅருணன், உதயசூரியன் உள்ளிட்டோா் பேசினா். அப்போது, கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் குடிநீா் குழாய்களில் உடைப்பு, சுகாதாரமற்ற குடிநீரை விநியோகிக்கும் நிலை, மாசு குறைபாடு உள்ளிட்டபிரச்னைகள் குறித்து விளக்கி, தமிழகத்திலிருந்து எவ்வித கனிமவளத்தையும் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாத என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அலுவலா்கள் தெரிவித்தனா். எனினும், அதில் உடன்படாமல் திட்டமிட்டபடி மறியல் நடைபெறும் என போராட்டக் குழுவினா் அறிவித்தனா்.