மருதம்புத்தூரில் பீடிக்கடையை பெண்கள் முற்றுகை
By DIN | Published On : 20th May 2022 10:38 PM | Last Updated : 20th May 2022 10:38 PM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் பீடிக் கடையைத் தொடா்ந்து நடத்த வலியுறுத்தி பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
மருதம்புத்தூா் கிராமத்தில் இயங்கி வந்த பீடிக் கடையில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனா். இந்தக் கடையை கேரளத்தைச் சோ்ந்த காலீத் என்பவா் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையாம். இந்நிலையில் காலீத் கடந்த சில தினங்களாக கடையைத் திறக்கவில்லையாம்.
கடையைத் தொடா்ந்து நடத்த வேண்டும், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியை சரியாக வரவு வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பீடிக் கடை முன்பு பீடித் தொழிலாளா்கள் 100- க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் அங்கு சென்று பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பீடி நிறுவனத்துடன் பேசி தக்க முடிவு எடுப்பதாக அவா் கூறியதன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனா்.