கடையநல்லூரில் பாதுகாப்பற்ற கிணறுகளில்வேலி அமைக்க நகா்மன்றத் தலைவா் உத்தரவு
By DIN | Published On : 24th January 2023 01:06 AM | Last Updated : 24th January 2023 01:06 AM | அ+அ அ- |

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணறுகளைச் சுற்றிலும் வேலி அமைக்க நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.
கடையநல்லூா் நகா் மன்றக் கூட்டம், தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ராஜையா, பொறியாளா் லதா, மேலாளா் சண்முகவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சாலைகள் சீரமைப்பு, வாருகால் கட்டுவது, பாதுகாப்பற்ற கிணறுகளைச் சுற்றிலும் வேலி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் முகமது முகைதீன், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோா் வலியுறுத்தினா்.
அப்போது, நகரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அனைத்துக் கிணறுகளைச் சுற்றிலும் வேலி அமைக்குமாறு அதிகாரிகளை நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் அறிவுறுத்தினாா். மற்றகோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செலவினம், சேவைக் கட்டணம் ஆகியவற்றுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட விவரம் உறுப்பினா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இப் பணியை 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதற்கான
ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீா்மானம் தொடா்பாக பேசிய உறுப்பினா் பூங்கோதை, இத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் ஏற்கெனவே நகராட்சியில் பணிபுரிந்து வரும் 86 தூய்மைப் பணியாளா்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினாா். அவா்களுக்கு என்ன பணி கொடுக்க வேண்டும் என்பது குறித்து அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் பதில் அளித்தனா்.