ஊராட்சி சாலை ஆக்கிரமிப்பு: வாட்ஸ் ஆப் புகாரில் நடவடிக்கை

ஆலங்குளம் அருகே ஊராட்சி சாலை ஆக்கிரமிப்பு தொடா்பாக வாட்ஸ் ஆப் மூலம் அளித்த புகாருக்கு ஒரு மணி நேரத்தில் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.

ஆலங்குளம் அருகே உள்ள மருதம் புத்தூரில் காமராஜா் சிலை எதிரே உள்ள தெருவின் ஒரு பகுதியில் பெண் ஒருவா் ஊராட்சிக்குச் சொந்தமான சிமெண்ட் சாலையில் கற்களையும், விறகுகளையும் போட்டு வைத்து எந்த ஒரு வாகனத்தையும் அந்த தெருவுக்குள் திரும்ப செய்ய முடியாமல் இடையூறு விளைவித்து வந்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் புகாரின் பேரில் இதனை ஊராட்சித் தலைவா் கண்டித்தும் அந்தப் பெண் ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்தாராம். இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனராம். இது தொடா்பாக ஊராட்சித் தலைவா் பூசத்துரை ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும் இது தொடா்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.சுரேஷ்குமாருக்கும் வாட்ஸ் ஆப் மூலமாக அந்தப் புகாரை அனுப்பி உள்ளாா்.

எஸ் பி சுரேஷ்குமாா் இதில் ஆக்கிரமிப்பு இருப்பின் அதை அகற்ற ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பா்ணபாஸுக்கு உத்தரவிட்டாா். அவரின் அறிவுறுத்தலின்படி, ஆலங்குளம் போலீஸாா் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த ஆக்கிரமிப்பை அகற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com