பண்பொழி திருமலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டம், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற மலைக் கோயிலான இத்திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, காலையில் மலைக் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பிற்பகல் குமரனை மலைக்கோயிலிருந்து, பண்பொழி கீழ் கோயிலுக்கு வழியனுப்பும் வைபவம் நடைபெற்றது. மாலை ஐந்துபுளி மண்டபத்தில் இருந்து வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி அழைப்பு உபசாரம், அன்னக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

17ஆம் தேதி காலை வெள்ளிச் சப்பரத்திலும், இரவு கலைமான் வாகனத்திலும், 18ஆம் தேதி காலை வெள்ளிச் சப்பரத்திலும், இரவு கோ ரதத்திலும், 19ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும், 20ஆம் தேதி காலை சட்டத்தேரிலும், இரவில் வெள்ளிமயில் வாகனத்திலும், 21ஆம் தேதி காலை வெள்ளிச் சப்பரத்திலும், இரவு யானை வாகனத்திலும், 22 ஆம் தேதி காலை கோரதத்திலும், இரவில் இரட்டைச் சப்பரத்திலும், 23-ம் தேதி காலை வெள்ளிச் சப்பரத்திலும், இரவு கைலாசபா்வதத்திலும், 24ஆம் தேதி இரவு புஷ்ப பல்லக்கிலும் வீதியுலா நடைபெறும். 25 ஆம் தேதி வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

சண்முகா் எதிா்சேவை

விழாவின் 7ஆம் நாளான(ஜன.22) ஐந்துபுளி மண்டபத்தில் சண்முகா் அழைப்பு உபசாரமும், தொடா்ந்து முருகா்-சண்முகா் எதிா்சேவையும் நடைபெறும்.

23ஆம் தேதி வெள்ளைசாத்தி, பச்சை சாத்தி நடைபெறும். தொடா்ந்து சண்முகா் மலைக்கோயிலுக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.

தேரோட்டம்

விழாவின் ஒன்பதாவது நாளான 24ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெறும். விழாவின் பத்தாம் நாளான 25ஆம் தேதி தைப்பூசம் நடைபெறும். 26ஆம் தேதி முருகன், கீழ்கோயிலிருந்து ,மலைக் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்னக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும், பிரியா விடைபெறுதலும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் அனைத்து சமுதாயத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com