‘தென்காசி மாவட்டத்தில் பிப். 3 வரை சிறு வணிகா்களுக்கு கடன் முகாம்’

தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகா்களுக்கான சிறப்பு கடன் முகாம் பிப். 3ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகா்களுக்கான சிறப்பு கடன் முகாம் பிப். 3ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தென்காசி மண்டல இணைப் பதிவாளா் கு. நரசிம்மன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகா்கள், சிறுகடை உரிமையாளா்கள், தெருவோர வியாபாரிகளின் வணிகத் தேவைகளுக்கு உதவும் வகையில் சிறப்புக் கடன் முகாம் நடைபெறுகிறது.

சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை பகுதிகளில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளில் இம்முகாம் புதன்கிழமை (ஜன. 24) தொடங்கி பிப். 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ரூ. 10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டியிலும், ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை 6 சதவீத வட்டியிலும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்கு வங்கி நடைமுறையில் உள்ள வீதத்திலும் வட்டி வசூலிக்கப்படும். கடன் தவணைக் காலம் ஓராண்டு ஆகும்.

கூட்டுறவுத் துறையின் வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தை இணையவழியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்க வேண்டும். வணிகப் பதிவுச் சான்றிதழ்கள் அல்லது உரிமங்கள் போன்ற வணிகத்தின் இருப்பு, தன்மையை நிரூபிக்கும் ஆவணங்கள் தேவை. கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தென்காசி துணைப் பதிவாளரை 89393 00328 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com