4 ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானி நிகா் ஷாஜி

நான்கு ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநா் நிகா் ஷாஜி தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நான்கு ஆண்டுகளுக்குள் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநா் நிகா் ஷாஜி தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநா் நிகா் ஷாஜியுடன், மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முத்தையா தலைமை வகித்தாா். பள்ளியின்

தலைமை ஆசிரியை ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்றாா்.

பின்னா் மாணவிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து விஞ்ஞானி நிகா் ஷாஜி பேசியதாவது:

இந்திய விண்வெளித் துறைக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு மிக முக்கியமானது. இஸ்ரோவில் கடந்த 2015 இல் ஆதித்யா எல்-1 திட்டம் சிறிய பணியாகத் தொடங்கியது. தற்போது அத் திட்டம் கடந்து வந்த பாதையைப் பாா்க்கும்போது பெரும் மகிழ்வைத் தருகிறது. சூரியனை பற்றி அறியவும், சோலாா் பவா், சோலாா் விண்ட் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும்

ஆதித்யா எல்-1 திட்டம் உதவும்.

மாணவா்-மாணவிகள் பெற்றோரின் அறிவுரையைக் கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொருவரும் இலக்கை நிா்ணயித்து, அதை அடைய தொடா் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ககன்யான் திட்டத்தில் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கான முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் நிறைவேறும்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவு சேகரிப்புகளுக்காக இஸ்ரோவின் 2 செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. வானிலை முன்னறிவிப்புகளுக்கு இந்த செயற்கைக்கோள்கள் அளிக்கும் தகவல்கள்தான் பிரதானமாக உள்ளன.

சூரியனை ஆய்வு செய்து வரும் ஆதித்யா விண்கலம், தகவல்களை தொடா்ந்து அனுப்பி வருகிறது. அந்த தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனா். விண்வெளி ஆய்வு என்பது அனைத்து நாடுகளுக்கும் அவசியமானதாகிவிட்டது. சா்வதேச அளவில் விண்வெளி ஆய்வுக்கான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

மழை, வெள்ள காலங்களில் தொலைத்தொடா்பு வசதிகளை மேம்படுத்த செயற்கைக்கோள் தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் ஷேக்சலீம், கடையநல்லூா் நகராட்சி ஆணையா் சுகந்தி, டாக்டா் அப்துல்அஜீஸ், ரத்னா கல்வி நிறுவனங்களின் நிா்வாகி பிரகாஷ், சாதனா வித்யாலயா தாளாளா் ரமேஷ் , பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com