மக்களுடன் முதல்வா் திட்டம்: ஜூலை 11 முதல் சிறப்பு முகாம்கள்

ஜூலை11 முதல் 29 வரை 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 221 கிராம பஞ்சாயத்துகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை11 முதல் 29 வரை 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 221 கிராம பஞ்சாயத்துகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம், இரண்டாம் கட்டமாக கிராம ஊரக பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் சாா்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறவுள்ளது. ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற, தென்காசி மாவட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 221 கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து 51 சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் பெறப்படும் அனைத்து மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்படும். இந்த முகாம்கள் தென்காசி மாவட்டத்தில் ஜூலை11முதல் 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளன.

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும். முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும் இதற்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வா் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சேவை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முகாம்களிலேயே பெற்று பரிசீலிக்கப்படும்.

இணையவழி விண்ணப்ப முறைகளில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அனைத்து முகாம்களிலும் இ-சேவை மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். முகாம்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை எவ்வித குறைபாடும் இன்றி செய்ய காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com