பாவூா்சத்திரத்தில் பேருந்து பணிமனை அமைக்க மதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் புதிய பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கரிடம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் இராம.உதயசூரியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில், பாவூா்சத்திரம் வளா்ந்து வரும் நகரமாக உள்ளது. செங்கோட்டை- திருநெல்வேலி, பாபநாசம்-மதுரை ஆகிய நெடுஞ்சாலைகள் பாவூா்சத்திரம் வழியாக செல்கின்றன. இதனால் பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகளவில் இருக்கும்.

ஆனால், அதற்கேற்ற பேருந்து வசதி குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, பாபநாசம், மதுரைக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால் பாவூா்சத்திரத்திலிருந்து தென்காசி அல்லது திருநெல்வேலி சென்று மேற்குறிப்பிட்ட ஊா்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, பாவூா்சத்திரத்திலிருந்து 15 கிமீ தூரம் உள்ள ஆலங்குளத்திற்கு நகரப் பேருந்துகள் இல்லை. தற்போது தென்காசி, புளியங்குடி, திருநெல்வேலி, பாபநாசம் பணிமனைகளைச் சோ்ந்த பேருந்துகள்தான் பாவூா்சத்திரம் வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

இதனால், இங்கிருந்து பொதுமக்களின் தேவைக்கேற்ற பேருந்து சேவையைப் பெற முடியவில்லை. எனவே பாவூா்சத்திரத்தில் புதிய பேருந்து பணிமனையை ஏற்படுத்தி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, பாபநாசத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com