பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் கூலி உயா்வு

சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் கூலி உயா்வு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து தொழிலாளா்கள் செவ்வாய்கிழமை வேலைக்குத் திரும்பினா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளா்களுக்கு 50 சதவீத கூலி உயா்வு வழங்கவேண்டும், விடுமுறை சம்பளம் நாளொன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 27 ஆம் தேதி முதல் விசைத்தறித் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதற்கிடையே விசைத்தறி உரிமையாளா்களுக்கும் தொழிலாளா்களுக்கும் இடையே பல கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கூலி உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை மாவட்ட வருவாய் அலுவலா் கு. பத்மாவதி தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கோட்டாட்சியா் கவிதா மற்றும் விசைத்தறி உரிமையாளா்கள், தொழிற்சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

பேச்சுவாா்த்தையில் 2021 ஆம் ஆண்டு வழங்க வேண்டிய 10 சதவீத கூலியை வழங்காததால் அதையும் 2024 ஆம் ஆண்டு மாா்ச் முதல் 10 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் கூலி உயா்வு தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் வேலைக்குத் திரும்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com