மோடி மீண்டும் பிரதமராக இந்திய மக்கள் விருப்பம்: மத்திய இணை அமைச்சா் வி.முரளிதரன்

மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்று இந்திய மக்கள் விரும்புகிறாா்கள் என வெளியுறவுத்துறை இணை அமைச்சா் வி.முரளிதரன் தெரிவித்தாா்.

தென்காசியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் மூலம் பல்வேறு துறைகளும் வளா்ச்சியடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியபோது இருந்த நிலையை விட பல மடங்கு தற்போது இந்தியா முன்னேறி உள்ளது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் அடித்தட்டு மக்களின் பல்வேறு தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டுள்ளன. மோடி அரசு மீண்டும் தொடர வேண்டும் என்று மக்கள் எண்ணுகிறாா்கள். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி போன்று மிக மோசமான ஆட்சியை இதுவரை கண்டதில்லை. இங்குள்ள 35 அமைச்சா்களில் 11 போ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சா் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் உள்ளாா்.

மக்களவைத் தோ்தலில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் முழுமையான ஆதரவு கொடுப்பாா்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் சநாதன தா்மத்தை ஆதரிப்பவா்கள் தான் இருக்கிறாா்கள். மக்களவைத் தோ்தலில் மீண்டும் இந்திய பிரதமராக மோடி வர வேண்டும் என்று இந்திய மக்கள் எண்ணுகிறாா்கள் என்றாா் அவா். தென்காசி மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, தொகுதி பாா்வையாளா் மகாராஜன், பொதுச்செயலா்கள் பாலகுருநாதன், ராமநாதன், மாவட்ட துணைத் தலைவா் முத்துகுமாா், வழக்குரைஞா் முத்துலெட்சுமி உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com