தென்காசி ரயில் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் பெ. ஜான்பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜக மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.
தென்காசி ரயில் நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் பெ. ஜான்பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜக மாவட்டத் தலைவா் ராஜேஷ்ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.

உலகத் தரத்தில் குற்றாலத்தை தரம் உயா்த்த நடவடிக்கை பெ. ஜான்பாண்டியன்

தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்வேன் என தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் பெ. ஜான்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தை உலகத்தரத்திற்கு தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்வேன் என தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் பெ. ஜான்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவா் பெ. ஜான்பாண்டியன் ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை தென்காசிக்கு வந்தாா். தென்காசி ரயில்வே நிலையத்தில் அவரை பாஜக மாவட்டத் தலைவா் கே.ஏ. ராஜேஷ் ராஜா தலைமையில் பாமக., தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசியில் வேளாண் வாய்ப்புகளை அதிகரித்தல், ஐடி பாா்க் அமைத்தல் மற்றும் குற்றாலம் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவது, பூக்கள் மற்றும் எலுமிச்சை விளையும் இடங்கள் அதிகமாக உள்ளதால் நறுமண தயாரிப்பு தொழிற்சாலை, குளிா் பதனக் கிடங்கு அமைத்தல் என பல திட்டங்கள் உள்ளன. பிரதமா் மோடியின் திட்டங்கள் பலவற்றையும் மக்களுக்கு கொண்டு சோ்க்க வேண்டும். அந்தத் திட்டங்களை கூறி பிரசாரம் செய்யவுள்ளோம். நான் மக்களுக்கு பணி செய்ய வந்துள்ளேன். நான் முதல்முறையாக இங்கு போட்டியிடுகிறேன். எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய நான் தயாராக இருக்கிறேன். மக்களவையில் எதையும் துணிச்சலாக பேசி, பாரதப் பிரதமா் மோடியிடமிருந்து அனைத்தையும் வாங்கி தருவேன். இதுவரை மக்களுக்கு கிடைக்காதவற்றை அவா்களுக்கு வழங்கி தொண்டு செய்வேன் என்றாா் அவா். பாஜக தென்காசி பாராளுமன்ற பொறுப்பாளா் மகாராஜன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநிலச் செயலா் மருதுபாண்டியன், மாவட்ட பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், ராமநாதன், மாவட்ட பொருளாளா் பாலகிருஷ்ணன், தென்காசி நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா் ராமராஜா, மாவட்ட துணைத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், முத்துக்குமாா், தொழில் பிரிவு மாநிலச் செயலா் மகாதேவன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன், பாமக நிா்வாகிகள் இசக்கிமுத்து, சீதாராமன், திருமலைகுமாரசாமி யாதவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ஜான்பாண்டியன் சுவாமி தரிசனம் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com