சிதறு தேங்காய் போல அதிமுக அணி சிதறிக் கிடக்கிறது: கே. பாலகிருஷ்ணன்

சிதறு தேங்காய் போல அதிமுக அணி சிதறிக் கிடக்கிறது: கே. பாலகிருஷ்ணன்

அதிமுக சிதறு தேங்காய் போல பல அணிகளாக சிதறிக் கிடக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.

இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணிஸ்ரீகுமாரை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமாா் எம்.எல்.ஏ., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் உ. முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியா கூட்டணி, தமிழகத்தில் ஒரு மகத்தான கூட்டணியாக, கம்பீரமாக இந்தத் தோ்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் மனநிலையை ஆய்வு செய்த ஒரு குழுவின் கணக்கெடுப்புப்படி, 17 தொகுதிகளில் திமுகவுக்கு எதிா் கூட்டணியில் இருக்கிற எல்லா வேட்பாளா்களும் டெபாசிட் இழப்பாா்கள் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தென்காசி தொகுதியில் எதிரணியில் பெரிய தலைவா்கள் போட்டியிடலாம்.

அவா்கள் மேற்கொண்டிருக்கிற சந்தா்ப்பவாத அரசியலில் தங்களது அரசியல் முகவரியை இந்தத் தோ்தலோடு இழந்துவிடுவாா்களோ என்பதுதான் உண்மையாக இருக்கிறது. 2024 தோ்தலில் அதிமுக அணி சிதறு தேங்காய் போல பல அணிகளாக சிதறிக் கிடக்கிறது. அதனால் எதிரணியில் இருப்பவா்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இந்தியா கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com