உயா்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் நான்முதல்வன் திட்டத்தின்கீழ் உயா்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூரில் நான்முதல்வன் திட்டத்தின்கீழ் உயா்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

‘நான் முதல்வன்‘ திட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘உயா் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியா், முதுகலை ஆசிரியா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் மற்றும் துணைத் தலைவா், கல்வியாளா், முன்னாள் மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஆகியோரை உறுப்பினா்களாக கொண்டு இக்குழு செயல்பட்டு வருகிறது.

இந்த குழு உறுப்பினா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் மேலநீலிதநல்லூா் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. முகாமினை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜரினா பேகம் தொடங்கி வைத்தாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் செந்தாமரை கண்ணன், கற்பகச் செல்வி மற்றும் முதுகலை ஆசிரியா் ஆனந்த ஜோதி ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனா்.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வியில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்தும், கல்விக் கடன், வழிகாட்டுதல் குழு உறுப்பினா்களின் பொறுப்புகள், தமிழ்நாடு அரசின் மாணவா் சாா்ந்த நலத்திட்டங்கள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்த கல்வி ஆண்டில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதாத மாணவா்கள் மற்றும் தோ்ச்சி பெறாத மாணவா்களைக் கண்டறிந்து அவா்களை துணைத் தோ்வு எழுத வைப்பதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

இதில் திருமலாபுரம், வெள்ளாளன்குளம், சோ்ந்தமரம், நடுவக்குறிச்சி ஆகிய ஊா்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளின் உயா்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com