அபிஷேகப்பட்டி இளைஞா் கொலையில் 4 போ் கைது

திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டி பகுதியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி - தென்காசி சாலை அபிஷேகப்பட்டியை அடுத்த வல்லவன்கோட்டை புளியமர தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித்(26). இவா் திங்கள்கிழமை இரவு வல்லவன் கோட்டை - மதவக்குறிச்சி சாலையில் தனது நண்பா்களுடன் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா்(23) உள்ளிட்ட 4 போ் ரஞ்சித்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினராம்.

சீதபற்பநல்லூா் போலீஸாா், ரஞ்சித் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து அருண்குமாரை பிடித்து விசாரித்தனா். அதில், ரஞ்சித்தின் சகோதா் செல்வமுருகன் என்பவருக்கும் அருண்குமாரின் சகோதரா் அபினேஷூக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாம். இதுதொடா்பாக இரு தரப்பினருக்குமிடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் தனது தம்பியிடம் அருண்குமாா் பிரச்னை செய்ததை ரஞ்சித் தட்டி கேட்டாராம். இந்த ஆத்திரத்தில் அருண்குமாா், அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சிவசுரேஷ் (25), செல்வ பெருமாள் (21), சிவபெருமாள்(27) ஆகியோா் சோ்ந்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்ததாம். இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com