
பூலித்தேவா், வெண்ணிகாலாடிக்கு நினைவு தபால் தலை: பாஜக கோரிக்கை
விடுதலைப் போராட்ட வீரா்களான நெல்கட்டும்செவல் மாமன்னா் பூலித்தேவா், அவரது முதன்மைத் தளபதி வெண்ணிக்காலாடி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் நினைவு தபால் தலைகளை வெளியிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் மனு அளித்த தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.
விடுதலைப் போராட்ட வீரா்களான நெல்கட்டும்செவல் மாமன்னா் பூலித்தேவா், அவரது முதன்மைத் தளபதி வெண்ணிக்காலாடி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் நினைவு தபால் தலைகளை வெளியிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய எம்.சிந்தியாவை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:
ஆங்கிலேயா் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய ஆரம்பகால விடுதலைப் போராட்ட வீரா்களான நெல்கட்டும்செவல் மாமன்னா் பூலித்தேவா், அவரது முதன்மைத் தளபதி வெண்ணிக்காலாடி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் செப்டம்பா் 1 அன்று நெல்கட்டும்செவலில் நினைவு தபால் தலைகளை வெளியிட வேண்டும்.
தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி தபால் கோட்டம் உருவாக்க வேண்டும். தென்காசி தலைமை தபால் நிலையத்தில் கூடுதல் தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்க வேண்டும். தபால் துறை மூலம் பி.எஸ்.என்.எல். சிம் காா்டுகளை வீடுகளுக்கே வழங்கும் சேவையை தென்காசி மாவட்டத்துக்கு விரிவுபடுத்த வேண்டும்.
புளியங்குடியில் தபால் துறைக்குச் சொந்தமான இடம் உள்ள நிலையில், புளியங்குடி துணை தபால் நிலையத்துக்கு நிரந்தர துறைசாா் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.
தென்காசி, விருதுநகா் மாவட்டங்களில் பாரத்நெட் இணைய சேவையின் செயல்பாட்டுத் தயாா்நிலை குறித்து மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தென் தமிழகத்தில் தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (சி-டாட்), தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். தொலைத்தொடா்பு வடிவமைப்பு மற்றும் புத்தொழில் வளா்ப்பு மையத்துடன், கிராமப்புற தொலைத் தொடா்பு தொழில்நுட்பங்களை நேரடியாகக் களத்தில் சோதித்துப் பாா்க்கும் கிராமப்புற தொலைத்தொடா்பு களச் சோதனை மையத்தை தென்காசியில் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






