சுடச்சுட

    

    பாடப் புத்தகங்களில் தனிநாயகம் அடிகளார் வரலாறு

    By திருநெல்வேலி  |   Published on : 01st December 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை தொடங்கியிருப்பதைப் போன்று, பாடப் புத்தகங்களிலும் தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை வரலாறு இடம் பெறச் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஆ.கு. குமரகுரு வலியுறுத்தினார்.

    பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் முன்னிலை வகித்து அவர் பேசியது:

    67 ஆண்டுகளாக தமிழ்மொழிக்காக அளப்பரிய சாதனைகளைச் செய்து காட்டியவர் தனிநாயகம் அடிகளார். உலகத் தமிழர்களை ஒருங்கிணைந்து 4 உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியவர். ஆங்கிலம், தமிழ் மொழி மட்டுமல்லாது இத்தாலி, ரோமாபுரி, ஹீப்ரு, பிரெஞ்ச், ஸ்பானிஷ் உள்ளிட்ட 14 மொழிகளில் புலமை மிக்கவர். தமிழ்ப் புலவர் மட்டுமல்லாது பன்மொழிப் புலவராகவும் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்யாமல் போனதால் இப்போதுள்ள தலைமுறையினரும், அடுத்த தலைமுறையினரும் அவரைப் பற்றி அறியாத நிலையே உள்ளது.

    தேசத் தந்தை, தியாகச் செம்மல்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போன்று தனிநாயகம் அடிகளாரின் வரலாறையும் பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரால் அறக்கட்டளையை ஏற்படுத்தியதைப்போன்று இதற்கும் நூற்றாண்டு விழாக் குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    இக் கருத்தரங்கத்துக்கு பேராசிரியர் தொ. பரமசிவன் தலைமை வகித்தார். விழா வரவேற்புக் குழு பொதுச்செயலர் ம. பிரிட்டோ வரவேற்றார். தனிநாயகம் அடிகள் தமிழ் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அமுதன் அடிகளார் தொடக்கவுரையாற்றினார். திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், திரு இருதய  சகோதரர்கள் சபை தலைவர் விக்டர்தாஸ், சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் அ. ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    தனிநாயகம் அடிகளும், உலகில் தமிழியல் ஆய்வுகளும், தனிநாயகம் அடிகளாரின் திருக்குறள் ஆய்வுகள், அடிகளார் காலத்தில் ஈழத்து தமிழ் இலக்கியச் சூழல், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும், மாநாடுகளும் என்ற மூன்று அமர்வுகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்மொழி ஆர்வலர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai