சுடச்சுட

  

  வள்ளியூரில் பள்ளி மாணவர்களுக்கிடையே சனிக்கிழமை ஏற்பட்ட  மோதலை அடுத்து, அவர்களை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து கிராம மக்கள் திரண்டு வந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  வள்ளியூர் அருகே உள்ள பனிசகுளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அங்குள்ள  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளி முடிந்து பஸ்ஸில் ஏறும்போது அவருக்கும் தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

  இதையடுத்து இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மற்றொரு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், அதே பள்ளியில் படித்துவரும் மாணவியை கிண்டல் செய்தாராம்.

  இதை  வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் இரு மாணவர்கள் கண்டித்தனராம். இதனால் இவர்களும் இரு கோஷ்டியாக மோதிக்கொண்டனராம்.

  இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களை வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் பரமசிவன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

  இதையறிந்த அம்மச்சிக்கோவில், ஊத்தடி, கண்ணநல்லூர், பனிசகுளம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வள்ளியூர் காவல்நிலையத்துக்கு திரண்டு வந்து, மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

  மேலும் பெண்கள் காவல்நிலைய வாசலில் அமர்ந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

  வள்ளியூர் ஆய்வாளர் பரமசிவன், கூடங்குளம் ஆய்வாளர் ராஜபால் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  உடனே டி.எஸ்.பி. ஸ்டேன்லி ஜோன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேசினார். மேலும் மாணவர்களை கண்டித்து அனைவரையும் விடுவித்தார். பின்னர் கிராம மக்கள் சென்றனர்.

  இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக 17 மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai