சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவரும், அவரது மனைவியும் வீட்டுக்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சனிக்கிழமை மாலையில் தெரியவந்த இத்தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  அம்பாசமுத்திரம் தெற்கு மாடத் தெருவைச் சேர்ந்தவர் பூ.அருள் (74). அரசு  மருத்துவரான இவர் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜான்சிராணி (65). இத்தம்பதிக்கு ஜாய் புவனா, முத்துப்ரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். முத்துப்ரியா சென்னையிலும், ஜாய்புவனா ஹைதராபாதிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அருள் தன் மனைவியுடன் அம்பாசமுத்திரம் வீட்டில் வசித்து வந்தார்.

  இந்நிலையில், சனிக்கிழமை மாலை பணிப்பெண் ஆண்டாள் வழக்கம்போல டாக்டரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் டாக்டர் அருளும், அவரது மனைவி ஜான்சிராணியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஓடிச்சென்று பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.

  இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், எஸ்.பி. விஜயேந்திர பிதரி, அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பா. மணிமாறன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர் டோம்னிக் ரவீந்திரன் தடயங்களைப் பதிவு செய்தார்.

  இரட்டைக் கொலை நடந்த வீட்டு முன் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  நகைக்காக கொலையா? டாக்டரும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது மாலையில்தான் தெரியவந்தது என்றாலும், அவர்கள் எப்போது கொலை செய்யப்பட்டனர் என்பது தெரியவில்லை. காரணம் என்ன என்றும் உடனடியாகத் தெரியவரவில்லை.

  கொலையுண்ட ஜான்சிராணி அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தனவாம். ஆனால், வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் எதுவும் திருடப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai