சுடச்சுட

  

  சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் பலி 300 பேரை சிறைப்பிடித்து மறியல்; போலீஸ் தடியடி

  By சங்கரன்கோவில்,  |   Published on : 02nd December 2013 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆலய வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து ஆலயத்துக்கு வந்த 300 பேரை சிறைப்பிடித்து ஒரு பிரிவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

  சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் உள்ளது தன்னூத்து கிராமம். இங்குள்ள புனித அருளானந்த ஆலயத்தில் உள்ள மாதா சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் கீழே விழுந்தது. இருப்பினும் அந்தச் சிலை எந்தப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருந்ததால், அதற்கு மின்னல் மாதா எனப் பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.

  இந்த ஆலயத்துக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களது குடிநீர்த் தேவைக்காக ஆலயத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு, டிராக்டரில் இருந்து தண்ணீரை ஏற்றுவதற்காக தன்னூத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் டிரைவர் கணேசன் (35) சென்றார். அவருக்கு உதவியாக காசிப்பாண்டி மகன் மணிகண்டனையும் (13) (8-ஆம் வகுப்பு மாணவர்) அழைத்துச் சென்றிருந்தார்.

  டிராக்டரில் இருந்து குடிநீர் ஏற்றி முடித்ததும் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தததாம். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தன்னூத்து கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அங்குள்ள விளக்குத்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்கெனவே விரோதம் இருந்துவருகிறது.

  இந்நிலையில், கிறிஸ்தவ ஆலயத்தில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த இருவர் இறந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இவர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஒரு பிரிவினர் தன்னூத்துக்கு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆலயத்துக்கு வந்த சுமார் 300 பேரையும், அவர்களது வாகனங்களையும் சிறைப்பிடித்தனர்.

  தகவலறிந்து கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிறைப்பிடித்தவர்களை விடுவிக்குமாறும்  கோரினர். ஆனால், இருவர் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்த பிறகே மறியலைக் கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், போலீஸாருக்கும்  பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  போலீஸ் தடியடி: பிற்பகல் 2 மணியளவில் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதரி தலைமையில், போலீஸார் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகச் செய்தனர். இதனால் கிராம மக்கள் சிதறி ஓடினர்.

  அவர்களில் சிலர் சிறைப்பிடித்திருந்த வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதில்  வாகனங்களில் இருந்த சிறு குழந்தை உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், சிறைப்பிடிக்கப்பட்டவர்களையும், வாகனங்களையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். மறியல், சிறைப்பிடிப்பு தொடர்பாக 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai