Enable Javscript for better performance
நெல்லை, குமரி, தூத்துக்குடியில் 43,300 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை, குமரி, தூத்துக்குடியில் 43,300 பேர் எழுதினர்

    By திருநெல்வேலி  |   Published on : 02nd December 2013 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வை 43,300 பேர் எழுதினர்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வள்ளியூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் என 99 மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது.

    தென்காசி ஏ.ஜி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையங்களில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் மு. கருணாகரன் பார்வையிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது: இம் மாவட்டத்தில் 99 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 28,208 பேருக்கு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 21,506 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். இது 75 சதவீதம். 7,152 பேர் தேர்வு எழுதவில்லை. 

    தேர்வு மையங்களை சார் ஆட்சியர் நிலையில் 11 பறக்கும் படையும், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் 26 குழுக்களும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அனைத்துத் தேர்வு மையங்களும் விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டன. காவல் துறை மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றார் அவர்.

    தென்காசி வட்டாட்சியர் கோட்டூர்சாமி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், தமிழ்நாடு அரசுத் தேர்வாணய பதிவு அலுவலர் பால்ராஜ், அதிகாரிகள் உடனிருந்தனர்.

    தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 53 மையங்களில் இத் தேர்வை 11,440 பேர் எழுதினர்.

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 49 மையங்களில் நடைபெற்ற இத் தேர்வை 10,804 பேர் எழுதினர்.

    14,252 பேருக்கு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்ததாகவும், 3,448 பேர் தேர்வெழுத வரவில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai