சுடச்சுட

  

  தேர்தல் விழிப்புணர்வு குறித்து மனிதச் சங்கிலி, மினி மாரத்தான்

  By திருநெல்வேலி  |   Published on : 03rd December 2013 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதச் சங்கிலி, மினி மாரத்தான், சைக்கிள் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறும் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

  தேர்தல் நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், வரும் மக்களவைத் தேர்தலில் தகுதியான வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்துநிலையம், ரயில் நிலையம், சந்தை ஆகிய பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் அமைத்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு மூலம் மனிதச் சங்கிலி இயக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் சைக்கிள் பேரணி, மினி மாரத்தான் போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  கிராமப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் மாவட்டக் கல்வித்துறை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுரை, ஓவியம் உள்ளிட்டப் போட்டிகள் நடத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் தொலைக்காட்சிகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். வழிபாட்டுத் தலங்கள், மின் கட்டணம் செலுத்தும் இடங்கள், ஏடிஎம் மையங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதுடன், பொதுமக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலமும் பிரசாரம் செய்யப்படும்.

  வரும் ஜன.25 ஆம் தேதி வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதுடன், வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய்த்துறை, கல்வித்துறை,  மகளிர் திட்டம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தவுள்ளன என்றார் ஆட்சியர்.

   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாமுவேல், தேர்தல் வட்டாட்சியர் பால்துரை உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai